Nội dung text Tamilum Thozhilnutpam Unit 4 Final VK VK.pptx
4.1.1 அணை இயற்கையாகத் தன்போக்கில் ஓடி வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி வைப்பதற்கும், அதை தாம் விரும்பும் பகுதிக்குக் கொண்டு செல்லவும் பயன்படும் அடிப்படையான தொழில்நுட்பம் அணைக்கட்டுதல் ஆகும். இவை பொதுவாக வெள்ளத் தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. சங்ககாலத்திற்கு முந்தைய தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் ‘கற்சிறை’ என்ற பெயரில் அணைக்கட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் சிறைப்பட்டுள்ளதால் இப்பெயரை இட்டுள்ளனர். கற்சிறைகள் என்ற பெயரிலான தொன்மையான, அணைக்கட்டுகளில் இன்றும் நாம் காணக்கூடியதாக ‘கல்லணை’ அமைகிறது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலச் சோழனால் மணற்பாங்கான காவிரி ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தமிழரின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றியது கல்லணை. கரிகாலனின் விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை. இது வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டுள்ளது. கல்லணையின் நீளம் – 1080 அடி கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி
கல்லணை அமைந்துள்ள இடம் கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை, தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில் தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. கல்லணையை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுப்டம் காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகள் கொண்டுவந்து போடப்பட்டது. அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். சர் ஆர்தர் காட்டன் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன். அவரே கல்லணையை ‘மகத்தான அணை’ எனக் குறிப்பிட்டவர். அதிக நீர் வரத்தால், மண்மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரிப் படுகை மண் மேடாக மாறியது. கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, ஆற்றில் வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வறண்டது. இந்தப் பிரச்சனையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த ஆங்கிலேய அரசு, சர் ஆர்தர் காட்டனிடம் இந்த பணியை ஒப்படைத்தது. மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார் என யோசித்த அவர் இதனை ஆய்வு செய்ய முடிவு செய்து, அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை ‘மகத்தான அணை’ (Grand Anicut) என குறிப்பிட்டு இருக்கிறார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்று போற்றப்படுக்கிறார். 19ஆம் நூற்றாண்டு வரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேல் அணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. கரிகாலனின் தொழில்நுட்பப் புதிரை அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் சர். ஆர்தர் காட்டன் என்னும் ஆங்கிலேயப் பொறியாளர் ஆவார். .