Nội dung text Tamilum Thozhilnutpam Unit 4 Final VK VK.pptx
“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவைப்படும் அடிப்படையான மூன்று விஷயங்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இவை மூன்றும் வேளாண்மையின் மூலம் ஒருவருக்கு கிடைக்கிறது. அந்த வேளாண்மைக்கு ஆதாரமாக நீர் அமைகிறது. தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் மிகத் தொன்மையானது. சங்ககாலம் தொட்டே நீரைக் கொண்டாடி, அதை பாதுகாத்துள்ளார்கள். சங்க காலத்தின் ‘முந்நீர் விழவு’ என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். வள்ளுவர் அரண் எனும் அதிகாரத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான அரணில் நீரினையே முதலாவதாக கூறுகிறார். வேளாண்மைக்கு ஏற்ற நீர்வளத்தை தமிழர்கள் திட்டமிட்டு அமைத்திருந்தனர். இந்தியாவிலேயே மழைநீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்காக அதிக நீர்நிலைகளை ஏற்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். மழைநீரை சேமிக்க தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைக்கப்பட்டன மழைநீர் மட்டுமின்றி ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டியும் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள். நீர் நிலைகளை குறிக்கும் பெயர்கள் அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் பெயர்கள். நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று. 4.1 நீர்ப்பாசனம்
4.1.1 அணை இயற்கையாகத் தன்போக்கில் ஓடி வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி வைப்பதற்கும், அதை தாம் விரும்பும் பகுதிக்குக் கொண்டு செல்லவும் பயன்படும் அடிப்படையான தொழில்நுட்பம் அணைக்கட்டுதல் ஆகும். இவை பொதுவாக வெள்ளத் தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. சங்ககாலத்திற்கு முந்தைய தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும் ‘கற்சிறை’ என்ற பெயரில் அணைக்கட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. கற்களால் கட்டப்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் சிறைப்பட்டுள்ளதால் இப்பெயரை இட்டுள்ளனர். கற்சிறைகள் என்ற பெயரிலான தொன்மையான, அணைக்கட்டுகளில் இன்றும் நாம் காணக்கூடியதாக ‘கல்லணை’ அமைகிறது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலச் சோழனால் மணற்பாங்கான காவிரி ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தமிழரின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றியது கல்லணை. கரிகாலனின் விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை. இது வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டுள்ளது. கல்லணையின் நீளம் – 1080 அடி கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி