Content text Unit 3 Final.pptx
அழகு-111 : நாட்டுபுறக் கலைகள் மட்றும் வீர விளையாட்டுகள்
3.1 தெருக்கூத்து பொருள் கூத்து என்பது நாட்டியம், நாடகம் என்ற இரண்டையும் உள்ளடக்கிய பொதுச்சொல். ஆடலும் பாடலும் கூத்தின் முக்கிய அம்சமாகும். தெருவில் நடத்தப்படும் கூத்து (நாடகம்) தெருக்கூத்து ஆகும். தெருக்கூத்து என்பது கிராமங்களில் நாடக மேடையோ காட்சித் திரைகளோ இல்லாமல் திறந்தவெளியில் எளிய முறையில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் ஓரு கலை. தெருக்கூத்து என்ற கலையை "கட்டை கட்டியாடும் நாடகம்" என்றும் அழைப்பர். மினுங்கும் கட்டையால் ஆன ஆடை அணிகலன்கள் அணிந்து ஆடி பாடுவதே தெருக்கூத்து தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய கலைகளில் தெருக்கூத்தும் ஒன்று. இது கிராமப்புற மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். திரெளபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது. தெருக்கூத்து கிராம மக்களது வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் தங்கள் மொழி, மதம் மீது கொண்ட பற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் அமைகிறது. 3.1.1 தெருக்கூத்தின் அமைப்பு: தெருக்கூத்து நடைபெறும் இடம் "களரி" எனப்படும். பொதுவாக மூன்று அல்லது நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் அல்லது கோவில் முற்றத்திலோ, அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவே இக்கூத்தானது இரவு பதினொரு மணியளவில் தொடங்கி விடிய விடிய நடத்தப்படும். .
அரங்கின் மூன்று பக்கங்களிலும் மக்கள் தரையில் அமர்கின்றனர். பார்வையாளர்களுக்கு என்று தனி இருக்கை கிடையாது. பெண்கள் கூட்டம் தனியாக அமர்ந்திருக்கும். திரைக்கு முன்பு கட்டில் போடப்பட்டு அதில் இசைக்கலைஞர்கள் அமர்ந்து இசைக்கருவிகளை இசைப்பார்கள். மேடை நாடகங்களில் பயன்படுத்தப்படும் வண்ண விளக்குகளை பயன்படுத்தாது ஆமணக்கு தீப்பந்தம், காந்த தூண்டல் விளக்குகள் தெருக்கூத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு குறைந்த ஒளி அமைப்பின் மூலம் பாத்திர தோற்றம் மற்றும் அவர்களின் முகச் சாயப்பூச்சின் வர்ணம் தொலைவில் உள்ளவர்களுக்கும் எடுப்பாக தெரியும். ஒப்பனை: மேடையில் இடப்பட்டுள்ள திரைக்குப் பின் ஒப்பனை நடைபெறும். நடிகர்கள் கதைக்கு ஏற்பவும் பாத்திரத்தின் இயல்புக்கேற்பவும் முக ஒப்பனை செய்து வண்ணமயமான ஆடைகளை அணிவார்கள். தெருக்கூத்து ஒப்பனையை " வேஷம் கட்டிக் கொள்வது" எனக் கூறுவர். முகப்பூச்சுக்கு கரிதூள், செந்தூரம், அரிதாரம், நாமக்ககட்டி, ஊதா வண்ணப் பொடி, கருப்பு வண்ண மையை பயன்படுத்துகின்றன. குண்டலம், சலங்கை, மோதிரம், ஒட்டியாணம், கழுத்தில் வண்ண மணிகள் முதலான அணிகலன்களை அணிந்துக்கொண்டு சேலைகளை உடம்பில் சுற்றிக்கொண்டும் பெரிய விரிந்த பாவாடை அணிந்தும் தங்களை பெரிய உருவாமாக காட்டுகின்றனர். கிரீடம், தோள்களில் கட்டிக் கொள்ளும் புஜக்கீர்த்திகள், கத்தி, வில், கதாயுதம் போன்ற கதாபாத்திரங்களுக்கான ஒப்பனை பொருட்களை அட்டை, துணி, வண்ணக்காகிதம், மரக்கட்டை கொண்டு தாங்களே பெரும்பாலும் செய்து கொள்கின்றனர்.
ஆடல் முறை மற்றும் இசை: அரங்கில் முதலில் நுழையும் பாத்திரம் 'கட்டியங்காரன்'. தெருக்கூத்தின் நகைச்சுவை கலைஞரான இவர் கூத்தின் முக்கிய நபராவார். நடக்க இருக்கும் கூத்தின் பெயர், கதாபாத்திரம் அறிமுகம் செய்தல், கதையை விளக்குதல், சேவகன், தேரோட்டி போன்ற சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பாதோடு கூத்தை முடித்து வைக்கும் பணியையும் இவரே செய்வார். தெருக்கூத்தில் இசை மிக முக்கியமான கூறாக விளங்குகிறது. மிருதங்கம், டோலக், ஜால்ரா, புல்லாங்குழல், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் பக்க வாத்தியங்கள் எனப்படும். கூத்து தொடங்கப் போவதைக் குறிக்கும் வகையில் எல்லா இசைக் கருவிகளும் ஒருசேர இசைக்கப்படும். இதனைக் ‘களரி கட்டுதல்’ என்பர். மேடை முன்பு இருவர் ஆளுக்கொரு பக்கம் திரையை கையில் தாங்கிப் பிடித்தவாறு நிற்க பாத்திரங்கள் நடிக்க வரும்போது திரை விலக்கப்படும். மேடைக்கு வரும் பாத்திரங்கள் நடனம் ஆடிக் கொண்டு தங்களின் சிறப்பை பாடிக்கொண்டே வருவார்கள். பாத்திரத்திற்கு எற்றார் போல வெவ்வேறு நடை அமைப்பு இருக்கும். முகபாவனை, மேடை அதிரும் நடை, உரத்த குரலில் பாடுவது, வசனம் பேசுவது, அடிக்கடி கைகளை வீசுவது, உடம்பை சுழற்றுவது என தெருக்கூத்தில் அனைத்துமே மிகைப்படுத்தப் பட்டவையாகவே இருக்கும். ஓரு நாடகப் பாத்திரம் பாடுகையில் பின்பாட்டுக்காரர்கள் அதைத் திரும்பப் பாடுவர். இசைக் கருவிகளும் இசைக்கும். கூத்தில் பாடல்கள் மூலமாகவே கதை சொல்லப்படும். அப்பாடல்கள் காட்சிக்கு வலுவூட்டும் வகையில் அமைகின்றது.