Content text Tamilum Thozhilnutpam Unit 3 Final VK VK.pptx
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. கடல் வழிப்பயணம் என்பது எளிமையானதன்று. இயற்கையைப் பற்றிய துல்லிய ஆராய்ச்சிப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே கடல்வழிப்பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும். காற்றின் போக்கு, அது வரும் திசை, காற்றின் அழுத்தம் ஆகியன பற்றிய அனுபவம் கடல்வழிப்பயணத்திற்கு மிக அவசியமானது. அத்தகைய திறனை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர். பாய்மரக்கப்பல்கள் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறன், கடல்வழி குறித்த அறிவு, கப்பலைச் செலுத்தும் திறன், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட திறன்களை அவர்கள் பெற்றிருந்தனர். இதுவே பண்டைய தமிழர் தமிழக நிலப்பரப்பையும் கடந்து பல தீவுகளில் கால்பதிக்கக் காரணமாகியது எனலாம். நாடுகளுடனான வணிகத்தொடர்புகள், பெறப்பட்ட பண்டங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டவை குறித்து பல குறிப்புகள் நம் இலக்கியங்களில் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் ‘முந்நீர் வழக்கம்’ என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம். 3.1 கப்பல் கட்டும் கலை